செய்திகள்
கைது

ஆம்பூர் அருகே இளம்பெண் கொலை- ஆட்டு வியாபாரி கைது

Published On 2020-03-08 19:47 IST   |   Update On 2020-03-08 19:47:00 IST
ஆம்பூர் அருகே இளம்பெண் கொலையில் ஆட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சின்ன கொம்மேஸ்வரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் சுமதி (வயது30). ஆம்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் மலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுமதியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது ஆம்பூர் அடுத்த மின்னூர் காளிகா புரத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் சீனு (30) ஆட்டு வியாபாரி. சுமதியுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதையடுத்து செதுவாலையில் உள்ள மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த சீனுவை நேற்றிரவு ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் சீனு கூறியிருப்பதாவது:-

நானும் சுமதியும் கடந்த 2 ஆண்டுகளாக சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் எனக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது சுமதி 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 17 நாட்களுக்கு முன்பு சாமுண்டி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது கோவில் திருவிழாவிற்கு சுமதியை அழைத்து சென்றேன்.

பின்னர் விண்ணமங்கலம் மலையில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் சீனு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News