செய்திகள்
கைது

கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்த துணை கலெக்டர்

Published On 2020-03-02 08:57 IST   |   Update On 2020-03-02 08:57:00 IST
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் தினகரன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி. இவர் தனது பூர்வீக நிலத்தை கடந்த ஆண்டு அவரது பெயருக்கு மாற்றும்போது முத்திரைதாள் கட்டணம் குறைவாக செலுத்தியிருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக ரஞ்சித்குமார், வேலூரில் உள்ள முத்திரைத்தாள் கட்டண அலுவலகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

அப்போது அங்கிருந்த தனித்துணை கலெக்டர் தினகரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலப்பத்திரத்தை விடுவிக்கிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம் வழங்கினர்.

போலீசார் கூறியபடி, ரஞ்சித்குமார் ரசாயனம் தடவிய பணத்தை துணை கலெக்டரிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்டு காரில் சென்ற துணை கலெக்டர் தினகரனையும் (வயது 47), அவரது டிரைவர் ரமேஷ்குமார் (45) என்பவரையும் லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் துணை கலெக்டர் வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லஞ்சப்பணம் மற்றும் கணக்கில் வராத பணம் என்று ரூ.79 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த துணை கலெக்டர் தினகரன் கடந்த 2001-ம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்துள்ளார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 19 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றியபோது சில இணைப்புகளை தனியாருக்கு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை லஞ்சஒழிப்பு போலீசார் 2018-ம் ஆண்டு தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே 2018-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாசில்தாராக பணிபுரிந்தவர் அங்கிருந்து துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று வேலூருக்கு வந்தார்.

சுமார் 1¼ ஆண்டுகள் முத்திரைத்தாள் கட்டண துணை கலெக்டராக பணியாற்றி உள்ளார். இந்த காலக்கட்டத்தில் தான் அவர் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வரும் விவசாயிகளிடம் உரிய பணத்தை பெறாமல், ஏராளமாக லஞ்சம் பெற்றுள்ளார். அவற்றில் ஒரு பகுதியை வீட்டில் இரும்பு பெட்டியில் பதுக்கி வைத்துள்ளார். அந்த பணத்துக்கு உரிய கணக்கை அவரால் காட்ட முடியவில்லை.



இதைத்தவிர லஞ்சப்பணத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் வாங்கி குவித்துள்ளார். அதுகுறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர் வாங்கி குவித்த சொத்துகள் கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் அவருடைய வீட்டில் இருந்து சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பாக பல விவசாயிகளிடம் தினகரன் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அந்த அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம்.

மேலும் குடியாத்தம் வருவாய் கோட்ட பகுதிகளில் காளைவிடும் திருவிழா அனுமதி அளிப்பது தொடர்பாக லஞ்சம் பெற்றாரா என்பது குறித்து விழாக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News