செய்திகள்
பரனூர் சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் மாயம்

Published On 2020-01-28 06:00 GMT   |   Update On 2020-01-28 06:00 GMT
பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 26-ந்தேதி அதிகாலை ஒரு மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பஸ் பரனூர் சுங்கச்சாவடியை வந்து அடைந்தது. அப்போது பஸ் டிரைவர் நாராயணனுக்கும், சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக வெடித்தது. சுங்கச்சாவடி ஊழியர்களை பஸ் பயணிகள் மற்றும் அங்கு வாகனங்களில் காத்திருந்த பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளையும் அடித்து நொறுக்கினர். கம்ப்யூட்டர், அலுவலகங்கள் சூறையாடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த  ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் பசும்பொன் முத்துராமலிங்கம், சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் கம்ப்யூட்டர், இணைய தள கேபிள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்ததால் அங்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக அனைத்து வாகனங்களும் சென்றன.

இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கம்ப்யூட்டரில் பதிவான கணக்கு விவரத்தை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் கொள்ளைப்போனதா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

சேதம் அடைந்த சுங்கச்சாவடியை சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இன்று 3-வது நாளாக வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்றன.

அரசு பஸ் டிரைவர் சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது  டிரைவர் அவர்களிடம் பாஸ்டேக்கில் ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக கூறி இருக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறே மோதலாக வெடித்து இருக்கிறது.

டிரைவரிடம் எல்லைமீறிய சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டதும் பஸ் பயணிகள் கண்டித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடியில் இருந்த வடமாநில ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக எதிர்த்ததால் மோதல் உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பஸ் பயணிகளும், பின்னால் வந்த மற்ற வாகனங்களில் இருந்த பொதுமக்களும் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News