செய்திகள்
கோப்புப்படம்

மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் புதுவை ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

Published On 2020-01-09 12:11 IST   |   Update On 2020-01-09 12:11:00 IST
புதுவை ரெயிலை வழக்கம் போல் 14 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் தினமும் காலை 7.40 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரெயில் 14 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக 12 பெட்டிகளுடன் வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போதிய இடவசதி இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ரெயிலை வழக்கம் போல் 14 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்திய ரெயில்வே அதிகாரிகள் நாளை முதல் (இன்று) வழக்கம் போல் இயக்கப்படும் என கூறினர்.

ஆனால் இன்று காலையும் 12 பெட்டிகளுடன் புதுச்சேரி ரெயில் மதுராந்தகத்தை வந்து அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை கலைந்து போகச் செய்தனர். தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

பயணிகளின் இந்த மறியல் போராட்டத்தால் புதுவை ரெயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

Similar News