செய்திகள்
தறிப்பட்டறை முன் கூடி உள்ள கூட்டம்

கவுந்தப்பாடி அருகே தறிப்பட்டறையில் பணிபுரிந்த 2 தொழிலாளர்கள் அடித்து கொலை

Published On 2020-01-06 10:46 IST   |   Update On 2020-01-06 10:46:00 IST
கவுந்தப்பாடி அருகே தறிப்பட்டறையில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது பி.மேட்டுப்பாளையம். இந்த பகுதியில் உள்ள கள்ளுக்கடை மேட்டில் பவர்லூம் தறிப்பட்டறை இயங்கி வருகிறது.

ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த தறிப்பட்டறையில் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களும் இந்த தறிப்பட்டறையில் 4 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

சுரேந்திரகுமார் வர்மா (வயது 28), நவீன்குமார் (24) மற்றும் சோராப் ரஞ்சன் (28), ரவீந்திரகுமார் (20) என்ற 4 பீகார் மாநில வாலிபர்கள் அந்த தறிப்பட்டறையில் கடந்த 1½ ஆண்டாக பணிபுரிந்து வந்தனர்.

இதில் சுரேந்திரகுமாருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் பீகாரில் உள்ளனர். சுரேந்திரகுமார் கவுந்தப்பாடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இதேபோல் நவீன் குமாருக்கும் திருமணமாகி விட்டது. மனைவியுடன் பி.மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தறிப்பட்டறை உள்ளே சுரேந்திரகுமாரும், நவீன்குமாரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை வழக்கம்போல மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வந்தபோது அங்கு பீகார் மாநில தொழிலாளர்களான சுரேந்திரகுமார் வர்மாவும், நவீன்குமாரும் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முன்விரோதம் காரணமாக இவர்களை யாரோ தடி மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொன்று இருக்க கூடும என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோரும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 தொழிலாளர்களை கொலை செய்தது யார்? என்ன காரணத்துக்காக இந்த படுகொலை நடந்தது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கை ரேகை நிபுணர் வந்து ரேகைகளை பதிவு செய்தார். ஈரோட்டிலிருந்து மைதிலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. ஆனால் யாரையும் நாய் கவ்விப் பிடிக்கவில்லை.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக அவர்களுடன் பணிபுரிந்து வரும் பீகார் மாநில வாலிபர்களான சோராப் ரஞ்சன், ரவீந்திரகுமார் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த இரட்டை கொலை சம்பவம் கவுந்தப்பாடி மற்றும் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News