செய்திகள்
முருகன் - நளினி

நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்: ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

Published On 2019-11-01 06:33 GMT   |   Update On 2019-11-01 06:33 GMT
வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து வருகிறார்.

இன்று 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை நேற்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது எங்கள் விடுதலை மற்றும் பரோலை தடுக்க ஜெயிலில் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். மேலும் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக நிருபர்களிடம் அவர் கூறினார்.

முருகனை தனி அறையில் அடைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 7-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி-முருகன் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2 பேரும் உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நளினியிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 2 பேரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News