செய்திகள்
குடை பிடித்தபடி பஸ்சை ஓட்டும் டிரைவர்

டிரைவர் குடைபிடித்தபடி ஓட்டும் அரசு பஸ்சின் அவலநிலை

Published On 2019-10-31 07:56 IST   |   Update On 2019-10-31 07:56:00 IST
வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுபஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மழைநீர் பஸ்சுக்குள் வருகிறது. இதனால் டிரைவர் குடைபிடித்தபடி பஸ்ஓட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் :

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழையில் நனையாமல் சென்றுவர பஸ்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அரசு பஸ்களில் செல்லும் பொதுமக்கள் சில நேரங்களில் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்தபடி பயணம் செய்யவேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

தற்போது பெய்துவரும் மழையிலும் அரசு பஸ்களில் அதேநிலைமைதான் உள்ளது. வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை மிகவும் பழைய பஸ்கள் என்பதால் அதன் மேற்கூரைகள் சேதமடைந்து மழைபெய்தால் மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகும்நிலை உள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழைபெய்தது. அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசுபஸ்சில் (ரூட் நம்பர் 225) பயணிகள் பயணம் செய்தனர். பலத்த மழைபெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. வழக்கமாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள்தான் இதுவரை குடைபிடித்து பயணம் செய்ததை பார்த்துள்ளோம்.

ஆனால் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சில் டிரைவரே குடைபிடித்துக்கொண்டு பஸ் ஓட்டும் அவலநிலை ஏற்பட்டது. பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கவேண்டிய டிரைவர் ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் பஸ்சை ஓட்டிச்சென்றார். இந்த அவலநிலையை பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News