செய்திகள்
நளினி

முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி வேலூர் ஜெயிலில் நளினி உண்ணாவிரதம்

Published On 2019-10-26 07:10 GMT   |   Update On 2019-10-26 07:10 GMT
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயலில் நளினி இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

7 பேரையும் முன்கூட்டி விடுதலை செய்ய கவர்னருக்கு சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

சிறையில் உள்ள 7 பேரையும் கவர்னர் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கவர்னர் தெரிவித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக தகவல் வரவில்லை.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக 51 நாட்கள் பரோல் கேட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

ஆனால் திருமண ஏற்பாடுகள் எதுவும் முடிவு செய்யவில்லை இதனையடுத்து பரவலை நீட்டிக்க கோரி நளினி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன் 2 சிம்கார்டு, ஒரு ஹெட்செட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவருக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

இதனை அடுத்து இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என சிறை அதிகாரிகள் கூறினர்.

நளினி உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News