செய்திகள்
கொலை

பெரும்பாக்கத்தில் டாஸ்மாக் கடையில் 2 பேர் வெட்டி கொலை- 6 பேர் கும்பல் தாக்குதல்

Published On 2019-10-15 08:44 GMT   |   Update On 2019-10-15 08:44 GMT
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக டாஸ்மாக் கடையில் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த், ஸ்டீபன். உறவினர்களான இவர்கள் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர்.

இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் மூட வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடை செயல்பட்டது.

இரவு 11 மணி அளவில் டாஸ்மாக் கடையில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்களது கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

அந்த கும்பல் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்த ஆனந்த், ஸ்டீபன் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

2 பேருக்கும் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இருவரையும் வெட்டி சாய்த்த கும்பல் மின்னல் வேகத்தில் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியேறியது. 6 பேரும் 3 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிகரணை போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனந்த்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

இந்த இரட்டை கொலை பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்களும் டாஸ்மாக் கடை முன்பு கூடினர்.

கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உடனடியாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் கொலையாளிகள் சிக்கவில்லை.

டாஸ்மாக் கடையில் மது குடித்த ஆனந்த், ஸ்டீபன் இருவரும் கூடுதல் விலைக்கு மது வாங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மது விற்றவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகராறு நடந்தபிறகு தான் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மது விற்பனையில் நடந்த மோதல் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் சென்னை உள்பட பல இடங்களில் இதனை யாரும் கடைபிடிப்பது இல்லை.

குறிப்பாக சென்னையில் அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் போலீஸ் கெடுபிடி காரணமாக தற்கொலை செய்தார்.

குறிப்பிட்ட நேரத்தை கடந்து மது விற்பனை செய்வதற்காக போலீசார் அவரிடம் மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் டாஸ்மாக் பார்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் ஆனந்த் ஆகிய இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த முன் விரோதம் காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் ஆட்டோ டிரைவராகவும், ஆனந்த் லாரி கிளீனராகராகவும் பணிபுரிந்து வந்தனர். இருவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News