செய்திகள்
மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.

மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2019-10-14 02:42 GMT   |   Update On 2019-10-14 02:42 GMT
மோடி-ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாமல்லபுரம் :

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு 2 நாட்கள் நடந்தது. இதனையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் அழகுபடுத்தப்பட்டன. மேலும் மாமல்லபுரமே மின்னொளியில் ஜொலித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அதிகஅளவில் வாகனங்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரை சாலை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

போக்குவரத்தை சரி செய்யவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் கிழக்கு ராஜ வீதியும், மேற்கு ராஜ வீதியும் நேற்று ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டாலும் வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.



வாகன நிறுத்தும் இடங்களில் போதிய இடம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வாகனங்கள் நகரை விட்டு வெளியே செல்ல பல மணி நேரம் ஆனது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் திணறினர்.

குறிப்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் புகைப்படம் எடுத்த வெண்ணை உருண்டை கல், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பம், குடும்பமாய் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

வெண்ணை உருண்டை பகுதியில் குழந்தைகள் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் ஐந்துரதம் பகுதியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து இளநீர் பருகிய இடங்களில் தாங்களும் நின்று புகைப்படம் எடுத்தனர். தற்போதும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து உணவருந்தி சென்றனர். சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்க தொல்லியல் துறை சார்பில் அர்ச்சுனன் தபசு சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மீறி கடை அமைப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தொல்லியல் துறை எச்சரித்துள்ளது. அதேபோல் கடற்கரை சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீதும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக ஆக்கிரமித்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில சுற்றுலாத்துறை எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News