செய்திகள்
மாட்டு கறி சூப்பை குடிப்பது போல் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட படம்

மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டு ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட வாலிபருக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது

Published On 2019-07-12 10:18 GMT   |   Update On 2019-07-12 10:18 GMT
நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர்கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்துள்ள கல்பாக்கம் பகுதியில் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அதன் கீழ் ஒரு சிலவாசகமும் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு பொரவச்சேரிக்கு வந்தார்.

இந்நிலையில் மாட்டு இறைச்சி சூப்பை முகம்மது பைசான் சாப்பிடும் புகைப்படத்தை அப்பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த தினேஷ் குமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட கும்பல் நேற்று இரவு முகம்மது பைசான் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த முகம்மது பைசானை கத்தி, மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். ஆவேசத்துடன் கும்பல் கத்தியால் குத்தியதில் முகம்மது பைசான் காயம் அடைந்தார். இதனால் பயந்து போன கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த முகம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முகம்மது பைசான் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கீழ்வேளூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே முகம்மது பைசானை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(24), கணேஷ் குமார்(25), மோகன் குமார்(27), அகஸ்தியன்(29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கைதான 4 பேரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் தலைமறைவாக இருந்து வரும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News