செய்திகள்

15 நாட்கள் தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டம்

Published On 2019-06-20 09:05 GMT   |   Update On 2019-06-20 09:05 GMT
ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்:

ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீர்வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. இந்தநிலையில் ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவில் உள்ள ராட்சத குடிநீர் டேங்கில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக இன்று காலை லாரிகள் வந்தன.

அவற்றை பார்த்ததும் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். வீட்டு இணைப்புகளுக்கே குடிநீர் வினியோகிக்காமல் லாரிகளில் தண்ணீர் பிடித்து எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கூறி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து குடிநீர் டேங்க் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன், நிர்வாகிகள் வேலவன், சுப்புராஜ், உதயா காங்கிரஸ் பகுதி செயலாளர் சீதாபதி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் சீராளன் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேசினர். இன்று மாலைக்குள் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News