இந்தியா

நாட்டை உலுக்கிய உன்னாவ் வழக்கு.. பாஜக முன்னாள் எம்எல்ஏ தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

Published On 2026-01-20 01:34 IST   |   Update On 2026-01-20 01:35:00 IST
  • சாட்சியான சிறுமியின் தந்தை கஸ்டடியில் கொல்லப்பட்டார்.
  • நீண்ட காலம் சிறையில் இருக்கிறார் என்பதற்காக மட்டும் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கின் சாட்சியான சிறுமியின் தந்தை மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு 2018-ஆம் ஆண்டு அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார்.

இந்தக் கஸ்டடி மரணம் தொடர்பாகக் குல்தீப் சிங் செங்கர் உட்பட 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை நிறுத்தி வைத்துத் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செங்கர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்தர் துடேஜா, "தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட காலம் சிறையில் இருக்கிறார் என்பதற்காக மட்டும் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது" என்று கூறி செங்கரின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News