செய்திகள்
கொலையான சிறுவன் தருண்

வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்றது ஏன்?: கைதான தாயின் 2-வது கணவர் வாக்குமூலம்

Published On 2019-06-19 10:30 GMT   |   Update On 2019-06-19 10:30 GMT
வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்று பாலாற்றில் புதைத்தது ஏன்? என்பது குறித்து கைதான தாயின் 2வது கணவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாலாஜா:

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (வயது 25). இவர்களுக்கு தருண் (4) என்ற குழந்தை இருந்தது.

கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

காவ்யா ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது ராணிப்பேட்டை நகராட்சி குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

2 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தையுடன் காவ்யா காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

முதல் கணவர் ராமச்சந்திரன் குழந்தையை தன்னிடம் தரும்படி காவ்யாவிடம் அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. குழந்தையால் தான் பிரச்சனை வருகிறது. மேலும் குழந்தை தங்களுக்கும் இடையூறாக இருக்கிறது. இதனால் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொல்ல காவ்யாவும், தியாகராஜனும் முடிவு செய்தனர்.

13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை காவ்யா, தியாகராஜன் இருவரும் தூக்கி வந்தனர். வீட்டுக்குள் சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து இறந்தது.

இதனையடுத்து பிணத்தை அரிசி மூட்டையில் கட்டி வைத்தனர். அன்று இரவு 2 பேரும் மூட்டையில் கட்டப்பட்ட குழந்தையை பைக்கில் எடுத்து சென்றனர்.

ஆற்காடு டெல்லிகேட் அருகே பாலாற்றில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்தனர். பின்னர் இருவரும் எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர்.

காவ்யாவின் தாய் குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை கொல்லப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக காவ்யாவை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தியாகராஜனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தியாகராஜனிடம் நடத்திய விசாரணையில் கூறியிருப்பதாவது:- காவ்யாவுக்கும் எனக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காவ்யாவுக்கு தருண் என்ற மகன் இருந்தான். முதல் கணவர், காவ்யாவிடம் வந்து நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போ. என் மகனை என்னிடம் கொடுத்து விடும்படி அடிக்கடி கேட்டு வந்தார்.

ஆனால் காவ்யா, மகனை அவருடன் அனுப்பாமல் வைத்திருந்தார். இதனால் எனக்கும், காவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வேறு ஒருவருக்கு பிறந்த மகனை என்னால் வளர்க்க முடியாது என காவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். தருணால் தான் நமக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தருணை கொன்று விடுவோம் என்று 2 பேரும் முடிவு செய்தோம்.

சம்பவத்தன்று அவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்து பிணத்தை பாலாற்றில் புதைத்தோம் என வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News