செய்திகள்

வேலூரில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது - வெப்ப அலையால் பொதுமக்கள் அவதி

Published On 2019-06-17 05:43 GMT   |   Update On 2019-06-17 05:43 GMT
வேலூரில் நேற்று 108.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இது அக்னிக்கு பிறகு வெயிலின் அதிகபட்ச பதிவாகும். கடுமையான வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.


வேலூர்:

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அக்னி முடிந்தாலும் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு தொடர்ந்து 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. அதிகபட்சமாக 112.5 டிகிரி சுட்டெரித்தது.

அக்னி முடிந்து விட்டது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்த பொதுமக்களை அக்னிக்கு பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

நேற்று வேலூரில் 108.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இது அக்னிக்கு பிறகு வெயிலின் அதிகபட்ச பதிவாகும். கடுமையான வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

நேற்று கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியது. குளிர்பான கடைகளை தேடி மக்கள் படையெடுத்தனர்.

இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்தது. இரவிலும் அனல் தெறிந்தது. மின் விசிறிகளும் அனல்காற்றை கக்கியதால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். கடுமையான அனல் வெப்ப அலையால் குழந்தைகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

நேற்று திருத்தணியில் 108 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 107 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, கடலூர், புதுச்சேரியில் 103 டிகிரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரி, தூத்துக்குடியில் 101 டிகிரி, நாமக்கல், பரங்கிப்பேட்டை, சேலம், காரைக்கால் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்துள்ளது.

இன்றும் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

“வாயு” புயல் சில நாட்களில் வலுவிழக்கும். பின்னர் இயல்பு நிலை திரும்ப சுமார் 4 நாட்கள் ஆகும். அதன் பிறகே தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கி தமிழகத்துக்கு மழை கிடைக்கும்.

மழை வந்தால்தான் தமிழகத்தில் வெப்பம் தணிந்து வெயில் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையில் மக்கள் திண்டாடி இருக்கும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் மக்கள் வருண பகவானை எதிர்நோக்கி உள்ளனர்.
Tags:    

Similar News