செய்திகள்

சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கமல் “பொறுக்குவதற்காகவே” இந்து தீவிரவாதி என பேச்சு- இல.கணேசன்

Published On 2019-05-16 10:12 GMT   |   Update On 2019-05-16 10:12 GMT
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கமல் “பொறுக்குவதற்காகவே” இந்து தீவிரவாதி என பேசியுள்ளார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.

பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..

கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News