செய்திகள்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்

Published On 2019-04-23 05:53 GMT   |   Update On 2019-04-23 05:53 GMT
மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LoksabhaElections2019
சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு அரசு துறைகளிலும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். வெளிமாநில பொது பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் உமாசங்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு உமாசங்கர் சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த உமாசங்கர், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவர் மத பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் நோயாளிகள் பலர் அவரை தேடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றனர். இதுபற்றிய தகவல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அவருக்கு பதில் இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகார் பார்தி புதிய தேர்தல் பார்வையாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். #LoksabhaElections2019
Tags:    

Similar News