செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்

Published On 2019-04-22 13:51 GMT   |   Update On 2019-04-22 13:51 GMT
பொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #girlmolestation

பெரம்பலூர்:

பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தலிடம் வக்கீல் அருள் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல் பழகி பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது போல் பெரம்பலூரிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.

மேலும் இந்த தகவலில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், தன்னை நிருபர் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் குழுவாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அவர்களால் பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று இளம்பெண்களை தங்களின் காம இச்சைக்கு இணங்க வைப்பதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் இச்சைக்கு பணிய வைப்பது, தங்களிடம் அடி பணிய மறுக்கும் பெண்களின் வீடியோவை வெளியிடுவோம் என்றும், அதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அவமானத்தில் தற்கொலை செய்வார்கள் என பெண்களை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

தற்போது வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல், ஏ.டி. எஸ்.பி. ரெங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #girlmolestation

Tags:    

Similar News