செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ரவுடி கொலையில் சென்னை பெண் கைது

Published On 2019-03-28 07:51 GMT   |   Update On 2019-03-28 07:51 GMT
ஸ்ரீபெரும்புதூரில் கணவரை கொன்றதால் கூலிப்படை மூலம் ரவுடியை கொலை செய்த சென்னை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை விவேகானந்த நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). பிரபல ரவுடி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பாஸ்கர் சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் ரவுடி பாஸ்கர் கொலையில் தொடர்புடைய சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனாவை போலீசார் கைது செய்தனர். கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.

கைதான புவனாவின் கணவர் கந்தன். கேபிள் ஆபரேட்டரான அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற போது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் ரவுடி பாஸ்கருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பழிக்கு பழிவாங்கும் விதமாக புவனா கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கொலையுண்ட பாஸ்கர் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி ‘பங்க்’ குமாரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

கடந்த 2006-ம் ஆண்டு ‘பங்க்’ குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

படப்பையில் தஞ்சம் அடைந்த பாஸ்கர் அங்கு ரவுடியாக சுற்றி வந்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே செய்த கொலைக்கு பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்டப்பட்டு விட்டார்.
Tags:    

Similar News