செய்திகள்

திமுக கூட்டணி பழைய சோறு - சங்கராபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2019-03-27 08:21 GMT   |   Update On 2019-03-27 08:21 GMT
சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது தி.மு.க. கூட்டணி பழைய சோறு என்று கூறினார். #LokSabhaElections2019
கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தில் எந்த முதல்வரும் சாதிக்க இயலாத காரியத்தை சாதித்து காட்டியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். சட்டரீதியாக போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தமிழகத்துக்காக வாங்கி தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த நாள் தான் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.



தி.மு.க. தலைவர் ஸ்டாலினை போன்று நடந்து சென்றும், சைக்கிள் ஓட்டியும், டீ கடையில் டீ குடிப்பது போன்றும், மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். நானே டீ கடை நடத்தியவன். டீ கடையில் டீ சாப்பிடுவது யார்? டீ சாப்பிடுவது போல் நடிப்பது யார்? என்பது எனக்கு தெரியும்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பேண்ட் போட்டுக்கொண்டு ஏர் உழுவது இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலர் கலராக பேண்ட், சட்டைகளை போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இலங்கையில் போர் நடக்கும்போது கருணாநிதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதுபோல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது,

இலங்கை தமிழர்களுக்காக நான் மத்திய அரசிடம் பேசி சுமூகமாக போரை நிறுத்தி விட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதேசமயத்தில் இலங்கையில் பதுங்கும் குழியில் இருந்தவர்கள் கருணாநிதியின் பேச்சை நம்பி வெளியே வந்தனர். அப்போது இலங்கை அரசு வெடிகுண்டுகளை வீசி தமிழர்களை அழித்து விட்டனர். அந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போரை நிறுத்த வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த சென்ற கனிமொழி இலங்கை தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தாமல் பரிசு மட்டும் வாங்கி வந்து விட்டார்.

தி.மு.க.வினர் பிரியாணி கடை மற்றும் பரோட்டா கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டதற்கு கடைக்காரர்கள் காசு கேட்டனர். காசு கொடுக்காமல் கடைக்காரர்களை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர்.

காலை முதல் மாலை வரை அடுப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்களை தி.மு.க.வினர் வயிற்றில் அடிக்கிறார்கள். ஓசியில் சாப்பிட்டால் செரிக்காது.

தி.மு.க.வினர் ஏற்கனவே அவர்களுடன் இருந்தவர்களுடனே கூட்டணி அமைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி பழைய சோறு ஆகும்.

அம்மா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் என்ற தமிழர்களின் பண்பாட்டின்படி பாதி சீட்டை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளோம். மீதி தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

தர்மத்தின் ஆட்சி நீடிக்கவும், வலிமையான பாரதம் அமையவும், வலிமையான பிரதமர் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நமது பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019
Tags:    

Similar News