செய்திகள்

2,000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைப்பு

Published On 2019-03-21 10:18 GMT   |   Update On 2019-03-21 10:18 GMT
ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #SpecialAssistance #TNgovt
சென்னை:

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என்றும், மனுதாரர் அந்த அரசாணை நகலை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அத்துடன், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அரசாணை மற்றும் தமிழக அரசின் வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க தடையில்லை என அறிவித்தனர்.



அதன்பின்னர் அரசாணையில் திருத்தம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி கருணாநிதி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த அரசாணை வரைவு அரசாணை என்றும், அரசு தாக்கல் செய்தது அசல் அரசாணை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வரைவு அரசாணை வெளியானது குறித்து விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SpecialAssistance #TNgovt
Tags:    

Similar News