செய்திகள்

திருக்கோவிலூர் அருகே வகுப்பறையில் மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியர் மீது தாக்குதல்

Published On 2019-03-15 11:27 GMT   |   Update On 2019-03-15 11:27 GMT
திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் வகுப்பறையில் மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியர் மீது பெற்றோர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேலக்கொண்டூர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

இதனை தொடர்ந்து மாற்று ஆசிரியராக அருகில் உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த மைக்கேல்காந்திராஜ் (வயது 50) என்பவர் நேற்று மேலக்கொண்டூர் பள்ளிக்கு ஒருநாள் பொறுப்பாசிரியராக வந்தார்.

மதிய உணவு இடை வேளையின் போது ஆசிரியர் மைக்கேல்காந்திராஜ் வகுப்பறையிலேயே மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தாமல் குடி போதையில் பள்ளி வளாகத்திலேயே சுற்றி வந்தார்.

மாலை 3 மணிக்கு பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் மைக்கேல்காந்திராஜ், 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து கொண்டு அங்குள்ள வகுப்பறைக்குள் சென்றார்.

பின்னர் அந்த மாணவிகளிடம் அவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். பின்னர் அவர்கள் அழுது கொண்டே தங்களது வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பள்ளியில் ஆசிரியர் செய்த சில்மி‌ஷம் குறித்து கண்ணீர் சிந்தியபடி கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அனைவரும் பள்ளிக்கு சென்றனர். அங்கு ஆசிரியர் மைக்கேல்காந்திராஜ் மயங்கிய நிலையில் இருந்தார்.

அவரிடம், பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறமுடியாமல் உளறி கெண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை வகுப்பறையில் வைத்து கதவை பூட்டி சிறைவைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அரகண்டநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மைக்கேல் காந்தி ராஜை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆசிரியரை பொதுமக்கள் தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் பத்திரமாக அவரை மீட்டு அரகண்டநல்லூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து ஆசிரியர் மைக்கேல்காந்திராஜை திருக்கோவிலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் மகளிர் காவல் நிலைய போலீசார் துருவி, துருவி விசாரனை நடத்தினார்கள். மேலும் இரவு 10 மணி ஆகி விட்டதால் ஆசிரியரை அங்கிருந்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை செய்தனர்.

Tags:    

Similar News