செய்திகள்

ஊட்டி நகருக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

Published On 2019-03-13 05:17 GMT   |   Update On 2019-03-13 05:18 GMT
ஊட்டி நகருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.இதன் காரணமாக தண்ணீர் , உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது.

இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஊட்டி நகரில் உள்ள மாரியம்மன் கோவில் வீதிக்கு வந்தது. கரடியை பார்த்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியது.

நாய்களிடம் இருந்து தப்பிக்க கரடி அந்த பகுதியில் உள்ள வீட்டின் கூரை மீது ஏறியது. பின்னர் அங்குமிங்கும் துள்ளி குதித்து ஓடியது. இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கரடி ஊருக்குள் நுழைந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். பொது மக்கள் சத்தம் எழுப்பி கரடியை விரட்டினர். இதில் பயந்த கரடி கட்டடங்கள் மீது ஏறியும், பொது மக்களை விரட்டியும் அச்சுறுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு பயந்த கரடி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் பதுங்கி உள்ளது.

கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை டாக்டர்கள் வராததால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

மார்க்கெட் பகுதியில் மக்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வனத்துறை டாக்டர்கள் வந்த உடன் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News