செய்திகள்

அபினந்தன் பெற்றோருக்கு தமிழிசை - பிரேமலதா ஆறுதல்

Published On 2019-02-28 08:39 GMT   |   Update On 2019-02-28 08:39 GMT
தாம்பரத்தில் உள்ள அபினந்தன் பெற்றோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan
தாம்பரம்:

தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தாம்பரத்தில் உள்ள அபினந்தன் வீட்டில் அவரது தந்தை வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். வரதமான் ஓய்வு பெற்ற விமானப்படை ஏர்மார்‌ஷல் ஆவார்.

அபினந்தன் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.



தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அபினந்தன் வீட்டுக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் 1942-ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக விமானப்படை பிரிவில் நாட்டுக்காக சேவை செய்து வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

தங்கள் மகன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்திப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைவதாக கூறினார்கள். இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

அதேநேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப தே.மு.தி.க. சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார். ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. சார்பிலும் மு.க.ஸ்டாலின் சார்பிலும் அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். அபினந்தன் வீரதீர செயல் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஜெனிவா ஒப்பந்தம் 13-வது பிரிவின்படி துன்புறுத்தாமல் நடத்தப்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தைரியமாக உள்ளனர். அவர்கள் தான் நமக்கு தைரியம் சொல்கிறார்கள். அபினந்தன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan 



Tags:    

Similar News