செய்திகள்
கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யா.

செல்லமாக வளர்த்த எனது மகளை கொன்று விட்டானே- ஆசிரியை ரம்யாவின் தாய் பேட்டி

Published On 2019-02-23 09:52 GMT   |   Update On 2019-02-23 09:52 GMT
செல்லமாக வளர்த்த தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டானே என்று குறிஞ்சிப்பாடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். #KurinjipadiMurder
கடலூர்:

குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியின் வளாகத்தில் ஆசிரியை ரம்யாவை வாலிபர் ராஜசேகர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் வள்ளி கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அப்போது அவள் தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

அதே பஸ்சில் விருத்தகிரிகுப்பத்தை சேர்ந்த வாலிபர் ராஜசேகரும் சென்று வந்துள்ளார். அவர் அடிக்கடி ரம்யாவிடம் பேசி வந்தார்.

அப்போது, நான் உன்னை காதலிப்பதாக கூறிவந்துள்ளார். இதனை ரம்யா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பஸ்சில் செல்லும்போது ரம்யாவின் செல்போனை ராஜசேகர் பறித்துள்ளார். மாலையில் ரம்யா வீட்டுக்கு வந்தவுடன் உனது செல்போனை எங்கே என்று கேட்டபோது, அவளது தோழியிடம் கொடுத்திருப்பதாக கூறினார். அவளது தோழியிடம் கேட்டபோது என்னிடம் செல்போனை ரம்யா தரவில்லை என்று கூறினாள்.

அதனை தொடர்ந்து ரம்யாவிடம் கேட்டபோது, ராஜசேகர் செல்போனை பறித்து விட்டதாக ரம்யா கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென்று சிலருடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ராஜசேகர் கேட்டார். நாங்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டோம்.

அப்போது ராஜசேகர் ஆத்திரம் அடைந்து ரம்யாவையும், அவரது தங்கையையும் கழுத்தை அறுத்து கொன்று விடுவதாக மிரட்டினார். ஆனால், நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ரம்யா குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவளுக்கு புதிதாக ஒரு செல்போன் வாங்கி கொடுத்தோம். இந்த நம்பரை எப்படியோ ராஜசேகர் தெரிந்து கொண்டான்.

அதன் மூலம் அவர் ரம்யாவின் உறவினர்களிடம், நான் அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளான். மேலும் ரம்யாவுக்கு செல்போனில், எனது காதலை ஏற்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்பி உள்ளான்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற என் மகளின் கழுத்தை அறுத்து ராஜசேகர் கொன்றுள்ளான். செல்லமாக வளர்த்த எனது மகளின் வாழ்க்கையை பாவி மகன் சீரழித்து விட்டானே.

இவ்வாறு அவர் கூறினார். #KurinjipadiMurder
Tags:    

Similar News