செய்திகள்

சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

Published On 2019-02-23 05:55 GMT   |   Update On 2019-02-23 05:55 GMT
சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

மதுரை அருகே உள்ள தத்தனேரி கன்னியப்பபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 34). இவர் திருச்சி தென்னக ரெயில்வே மதுரை ஜங்சன் அலுவலகத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பத்ம பிரியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 22-ந் தேதி சென்னையில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க மதுரையில் இருந்து நேற்று முன்தினம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சவுந்திரபாண்டியன் புறப்பட்டு சென்றார்.

ஆனால் நேற்று சென்னைக்கு அவர் சென்று சேரவில்லை. அவரது செல்போனுக்கு நேற்று காலை குடும்பத்தினர் தொடர்புகொண்ட போது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் செல்போன் டவர் உதவியுடன் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது திருச்சியில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளத்தூருக்கும், பூங்குடி என்ற கிராமத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் படுகாயத்துடன் சவுந்திரபாண்டியன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது செல்போனும் பிணத்தின் அருகிலேயே கிடந்தது. சவுந்திரபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை செய்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கிடையே ரெயிலில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்த சவுந்திரபாண்டியன், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ரெயிலில் பயணம் செய்தபோது வாசலில் நின்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனையின் போது சவுந்திரபாண்டியன் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News