செய்திகள்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்

Published On 2019-02-17 06:25 GMT   |   Update On 2019-02-17 06:25 GMT
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளையும், நாளை மறுதினம் 19-ந் தேதியும் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மறுமார்க்கமாக வேலூருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

இந்த ரெயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சாபுரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரெயில் காலை 5.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News