செய்திகள்

டெல்லியிலிருந்து புதுவை திரும்புகிறார் கவர்னர் கிரண்பேடி - நாராயணசாமியுடன் சமரசம் ஏற்படுமா?

Published On 2019-02-17 05:45 GMT   |   Update On 2019-02-17 05:45 GMT
கவர்னர் கிரண்பேடி டெல்லியிருந்து இன்று புதுவை திரும்புவதால் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Narayanasamy #GovernorKiranbedi
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.

புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பினார்.

அதில், புதுவையில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது, இதை கண்டு கொள்ளாமல் ஊரை விட்டே கவர்னர் வெளியேறி விட்டார். எனவே, அவருக்கு பதிலாக இடைக்கால கவர்னரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் டெல்லியில் உள்துறை மந்திரியை சந்தித்து இதுபற்றி புகார் கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதுவையில் போராட்டம் மேலும் விரிவடைந்து உள்ளது. நிலைமை மோசமாகி வருகிறது.

இதனால் கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்றே புதுவை திரும்புகிறார்.

மதியம் 2 மணி அளவில் அவர் கவர்னர் மாளிகைக்கு வந்து விடுவார் என்று கவர்னர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி குமரன் தெரிவித்தார்.



கவர்னர் அவசரமாக திரும்புவதால் அவர் முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதல்-அமைச்சரின் தர்ணா போராட்டம் இன்றே முடிவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி மீண்டும் புதுவை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். #Narayanasamy #GovernorKiranbedi
Tags:    

Similar News