செய்திகள்

முக ஸ்டாலின், தினகரனால் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் துரைக்கண்ணு

Published On 2019-01-29 20:59 IST   |   Update On 2019-01-29 20:59:00 IST
எத்தனை ஸ்டாலின் வந்தாலும், டி.டி.வி. தினகரன் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார். #ADMK
சுவாமிமலை:

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருவிடைமருதூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி. தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நிலவள வங்கி தலைவருமான ஏ.வி.கே.அசோக்குமார், ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வர வேற்றனர்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசியதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஜோசியர் போல, இன்று ஆட்சி கலைந்து விடும், நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என அடிக்கடி ஆரூடம் கூறி வருகிறார். சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். எதுவும் பலன் அளிக்கவில்லை. தற்போது மரத்தடி ஜோசியர் ஆகி விட்டார்.

அவருடைய ஆரூடம் என்றும் பலிக்காது. நாளையும் எங்கள் ஆட்சி தான் வரப்போகிறது. ஸ்டாலின் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் திகார் சிறைக்கு போவது உறுதி. டி.டி.வி. தினகரன் செய்த துரோகத்தால் தான் சசிகலா இன்று சிறையில் இருக்கிறார். தினகரனின் பேச்சை கேட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியை இழந்து விட்டனர். இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் படாதபாடுபடுகிறார்கள்.

இனி குக்கரால் விசில் அடிக்க முடியாது. எத்தனை ஸ்டாலின் வந்தாலும், டி.டி.வி. தினகரன் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், அ.தி.மு.க. பேச்சாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம.ராமநாதன், க.தவமணி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட பேரவை செயலாளர் எல்.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.சூரியமூர்த்தி, ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் திருநீலக்குடி ராஜ்குமரன் மாங்குடி பாலசுப்ரமணியன் கோவனூர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பாசறை செயலாளர் என்.பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #ADMK
Tags:    

Similar News