செய்திகள்

ஈரோட்டில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்- பாய்ந்து பிடித்து மடக்கிய காளையர்கள்

Published On 2019-01-19 08:08 GMT   |   Update On 2019-01-19 08:08 GMT
ஈரோட்டில் முதன் முறையாக இன்று நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
ஈரோடு:

தென் மாவட்டங்களில் மட்டுமே களை கட்டி வந்த ஜல்லிக்கட்டு போட்டி இப்போது வட மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோட்டில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் இந்த ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜல்லிக்கட்டை நேரில் காண ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர். பலர் நின்று கொண்டும் பார்த்தனர்.

போட்டியை காலை சரியாக 8.30 மணிக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக கலெக்டர் கதிரவன் தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையும் சீறி பாய்ந்து ஓடியது. காளைகளை அடக்க முதலில் 100 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பாய்ந்து வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் தயாராக காத்திருந்தனர்.

ஒவ்வொரு காளையும் துள்ளி குதித்து பாய்ந்து ஓடிய போது காளையர்களும் மாடுகள் மீது பாய்ந்து அடக்கினர். பல காளைகள் இளைஞர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஓடியது. மேலும் பல காளைகளின் திமிலை காளையர்கள் பிடித்து அடக்கினர்.

அவர்களுக்கு 3 அமைச்சர்கள் தங்க காசுகள் பரிசாக வழங்கினர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது ஒலி பெருக்கி மூலம் வர்ணனை செய்யப்பட்டது. ‘‘இதை யாரும் அடக்க முடியாத முரட்டு காளைகள் அடக்கி பாருங்கள்’’, ‘‘இப்போது பாய்ந்து வருவது காங்கயம் காளை இதை அடக்க யாரும் உண்டா?’’ என இளைஞர்களை உசுப்பேத்தி கொண்டே இருந்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களும் ‘‘என்ன காளையாக இருந்தாலும் அதை அடக்க நாங்கள் தயார்’’ என்று துணிச்சலுடன் காளைகளை அடக்கினர்.

காளைகளை அடக்கி வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க பரிசு, தங்க காசுகள் மற்றும் செல்போன், வாட்ச் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் போது 2 காளைகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. உடனே அதன் உரிமையாளர்கள் வந்து தங்கள் மாட்டை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

கூட்டம் அதிகமாக திரண்டதால் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் காயம் அடையும் மாடு பிடி வீரர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு இவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

ஆக மொத்தத்தில் ஈரோட்டில் முதன் முறையாக நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
Tags:    

Similar News