செய்திகள்

பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது - போலீசார் விசாரணை

Published On 2019-01-11 08:11 GMT   |   Update On 2019-01-11 08:11 GMT
பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரமக்குடி:

மதுரையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பயணிகள் ரெயில் மண்டபத்துக்கு புறப்பட்டது. காலை 9 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்தடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த ஒரு பையை பிளாட் பாரத்தில் வீசினர். ரெயில் சென்றுவிட அந்த பை கேட்பாரற்று கிடந்தது.

ரெயில் நிலையம் வந்த மோசஸ் என்பவர் அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் 2000, 500 ரூபாய் கட்டுகள் என ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது.

உடனே மோசஸ் அந்த பையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மோசஸ்சிடம் இருந்த பணப்பை தங்களுடையது என கூறினர். ஆனால் மோசஸ் தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பரமக்குடி நகர் போலீசாருக்கு பணம் சிக்கியது தொடர்பாக தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பணப் பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கும்பலையும், மோசசையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு விசாரணை நடத்தியதில் பணத்துக்குரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மேலும் பணம் தங்களுடையது என கூறிய தகவல்களும் நம்ப தகுந்தவையாக இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி பின்னர் யாருடையது? எதற்காக கடத்தப்பட்டது? ஹவாலா பணமா? என விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News