செய்திகள்

வடமதுரை அருகே பாலியல் தொந்தரவால் மில்லில் இருந்து தப்பியோடிய இளம்பெண்கள்

Published On 2018-12-26 17:38 IST   |   Update On 2018-12-26 17:38:00 IST
வடமதுரை அருகே நள்ளிரவில் மில்லில் இருந்து இளம்பெண்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடமதுரை:

வடமதுரை அருகே நாடுகண்டனூர் பிரிவு பகுதியில் பண்ணாரி அம்மன் மில் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு மில்லில் இருந்து சுவர் ஏறி குதித்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடினர். காவலாளி அவர்களை பிடிக்க முயன்றும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று மறைந்தனர்.

விசாரணையில் தப்பி ஓடியது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பிச்சை முத்து மகள் சந்தியா (வயது 28), முத்துப்பாண்டி மகள் சரண்யா (18) என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய இளம்பெண்களை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

வறுமை காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள், 8 மணி நேர வேலை உள்ளிட்டவைகள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியே. மேலும் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சினையில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து மில் வளாக விடுதியிலேயே ஒரு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தார்.

தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மில் வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வறுமை காரணமாக வேறு வழி இல்லாமல் அவர்கள் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இருந்தபோதும் வேலைப்பளு மற்றும் பாலியல் தொல்லை காரணமாக அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதி மில்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News