செய்திகள்

சென்னையில் கைது செய்யப்பட்ட பிறகும் போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்

Published On 2018-12-25 16:38 IST   |   Update On 2018-12-25 16:38:00 IST
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த பின்னரும் போலீசார் வாங்கி கொடுத்த உணவை சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை:

7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் 1,800 இடைநிலை ஆசிரியர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கை விடவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட 1,800 ஆசிரியர்களில் 1,000 பேர் ஆசிரியைகள் இதில் பலர் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் செந்தில் குமார், விமான நிலைய உதவி கமி‌ஷனர் விஜய குமார், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் கைதான ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். ஆனால் அதை சாப்பிட ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் சோர்வுடன் காணப்படுகின்றனர்.

இதுபற்றி போராட்டக் குழுவினர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிறகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News