செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

Published On 2018-12-19 11:05 GMT   |   Update On 2018-12-19 11:05 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்தார். #SterlitePlant #HCMaduraiBench
மதுரை:

தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையால் மாசு கழிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவத்தின் போது போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவை நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடந்த வாரம் பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா சார்பில் வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜரானார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதனை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterlitePlant #HCMaduraiBench
Tags:    

Similar News