செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் சேதமான தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்

Published On 2018-12-19 07:16 GMT   |   Update On 2018-12-19 07:16 GMT
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

திருவாரூர்:

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் எதிரே வெட்டாற்றாங்கரையில் தேக்கு மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலால் அங்கு இருந்த தேக்கு மரங்கள் சாய்ந்தன. இதனால் சேதமான தேக்கு மரங்களை ஏலம் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதற்கிடையே புயலால் சாய்ந்த தேக்கு மரங்களை சிலர் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் சிவராமன், தேக்கு மரங்களை துண்டு துண்டாக வெட்டி மத்திய பல்கலைக்கழக வளாக பகுதியில் பதுக்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இன்று விசாரித்தனர்.

மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தேக்கு மரங்கள் கடத்தல் சம்பவத்தில் பல்கலைக்கழக காவலாளியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News