செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது

Published On 2018-12-14 06:02 GMT   |   Update On 2018-12-14 06:02 GMT
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. #Elephants #Rejuvenationcamp
மேட்டுப்பாளையம்:

தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து 11-வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

தொடக்க நாளையொட்டி இன்று முகாம் முன் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. முகாம் முழுவதும் தென்னங்குருத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையிலே பாகன்கள் தங்கள் யானைகளை அங்குள்ள குளியல் மேடை, ‌ஷவருக்கு அழைத்து சென்று குளிக்க வைத்தனர்.

பின்னர் அந்தந்த கோவில்களின் அடையாளம் யானைகளின் நெற்றியில் இடப்பட்டது. இதனை தொடர்ந்து நெற்றி பட்டம் சூடி, யானை உடலில் அலங்கார துணி அணிவிக்கப்பட்டது.



அதன் பின்னர் 27 யானைகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆப்பிள், அன்னாசி, கரும்பு, தர்பூசணி, உருண்டை வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம் பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகைகள். யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3/4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை ‌ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப்பகுதியையொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதைத்தடுக்க முகாமைச்சுற்றிலும் 1 1/2கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய மின்வேலி தொங்கு மின்வேலிகள் சீரியல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் ஒளிவிட்டுப்பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதையும் மீறி காட்டு யானைகள் வர முயன்றால் அதனை விரட்ட பட்டாசுகளுடன் வன ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். முகாமுக்கு யானைகள் வரும் வழியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

முகாம் ஒருங்கிணைப்பாளரும் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான ராஜமாணிக்கம் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் முகாமுக்கு வந்த யானைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை தலைமை இடத்து இணை ஆணையர் ஹரிப்பிரியா, சட்டம் இணை ஆணையர் அசோக் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.  #Elephants #Rejuvenationcamp

Tags:    

Similar News