செய்திகள்

திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு அறிவுரை வழங்கி திருத்திய எஸ்.பி

Published On 2018-12-13 13:16 GMT   |   Update On 2018-12-13 13:16 GMT
தாய், தந்தையின்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்த வாலிபரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரை கூறி பழ வியாபாரத்தில் ஈடுபட வைத்துள்ளார். #Fruitbusiness #erodebusstand

ஈரோடு:

ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது19). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டார்.

தனது பாட்டி பாதுகாப்பில் மணிகண்டன் வளர்ந்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் ஈரோடு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து சிறு சிறு திருட்டு சம்பவ செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிகண்டன் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

பின்னர் மணிகண்டனை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் அழைத்து திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று மணிகண்டன் தான் திருந்தி வாழ்வதாக எஸ்.பி.யிடம் உறுதி கூறினார்.

ஆனால் மணிகண்டனுக்கு யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை. இதையறிந்த எஸ்.பி. சக்திகணேசன் மணிகண்டனுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்ய உதவினார்.

இதையடுத்து தற்போது மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். எஸ்.பி.சக்திகணேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  #Fruitbusiness #erodebusstand

Tags:    

Similar News