செய்திகள்

பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2018-12-11 13:32 IST   |   Update On 2018-12-11 13:32:00 IST
பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகரை சேர்ந்தவர் கங்கா என்கிற சுரேஷ்.

இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மணல் வியாபாரமும் செய்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் சுரேஷ் வீடு திரும்பினார்.

இரவு 10 மணி வரை குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார்.

10.30 மணியளவில் டமார் என்ற சத்தம் கேட்டது. சுரேஷ் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மீது யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. உடனே ‘அய்யோ தீ’ என்று அலறினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானகாட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்து கட்டிக் கொண்டு வந்த, 3 பேர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசியது தெரிய வந்தது. அவர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக இது நடந்ததா? அல்லது முன் விரோதமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கடந்த தீபாவளி அன்று சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News