செய்திகள்
மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி.

அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2018-12-10 05:38 GMT   |   Update On 2018-12-10 05:38 GMT
புதுக்கோட்டை அருகே கஜா புயலால் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். #Electricattack
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.

மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.

அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.

அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack


Tags:    

Similar News