செய்திகள்

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மந்திரி ஆய்வு செய்வதை தடுக்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2018-12-05 08:22 GMT   |   Update On 2018-12-05 08:22 GMT
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த இருக்கும் கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan #MekedatuDam
சென்னை:

த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த இருக்கும் கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

கர்நாடக மந்திரி தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (7-ந்தேதி) மேகதாது அணை குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி அவர் அறிவித்திருப்பதற்கு காரணம் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி தான்.

கர்நாடக அரசு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான வரைவு அறிக்கையை தாயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் அளித்த போதே மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் நேரடியாகவே ஆதரவு அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆய்வு நடத்த இருப்பதாக கூறியிருக்கின்ற கர்நாடக அமைச்சரின் முயற்சியை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண்டும்.

மத்திய அரசும் கர்நாடக அரசிடம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கோட்பாடுகளையும், அதிகாரத்தையும் குறிப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.

இல்லையென்றால் மத்திய அரசின் தமிழக விரோதப் போக்குக்கு தக்க பாடத்தை வரும் காலங்களில் தமிழக மக்கள் புகட்டுவார்கள். மாநிலங்களுக்கு இடையே நல்லுறவும், நியாயமும் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தில் மத்திய அரசுக்கு உள்ள பொறுப்பு, கடமை, மக்கள் நலன், மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை, நாட்டு நலன் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilacongress #GKVasan #MekedatuDam
Tags:    

Similar News