செய்திகள்

நாகை நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் சாலை விபத்தில் பலி

Published On 2018-11-23 03:49 GMT   |   Update On 2018-11-23 08:10 GMT
நாகை மாவட்டத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். #GajaCyclone #NagaiReliefCamp
வேதாரண்யம்:

கஜா புயலால் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தற்போது வேதாரண்யம் பகுதியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.



இதனால் கிராம மக்கள் சாலையோரங்களில் இரவு பகல் நேரங்களில் காத்திருந்து நிவாரண பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை வழிமறித்து உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

இந்த நிலையில் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரம் நின்ற 4 பெண்கள் கார் மோதி பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான்.

இந்த விபத்து பற்றிய விபரம் வருமாறு:-

ஏர்வாடியிலிருந்து நாகூரை நோக்கி நேற்று நள்ளிரவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேதாரண்யத்தை அடுத்த நீர்மூலை கிராமத்தில் கார் திடீரென நிலை தடுமாறி வேகமாக சென்றது.

அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமுதா, சுமதி, ராஜகுமாரி, சரோஜா ஆகிய 4 பெண்கள் பலியானார்கள்.

சரோஜாவின் மகன் மணிகண்டன் (வயது 15) படுகாயமடைந்தான்.

விபத்தை நேரில் பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 4 பேரின் உடலையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனுக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #GajaCyclone #NagaiReliefCamp

Tags:    

Similar News