செய்திகள்

சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம் - கன்னியாகுமரியில் முழு அடைப்பு

Published On 2018-11-23 03:29 GMT   |   Update On 2018-11-23 07:00 GMT
சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
நாகர்கோவில்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சபரிமலை சன்னிதானம் செல்லவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா கட்சி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.

பொன். ராதாகிருஷ்ணன் சென்ற காரை போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர். தடை உத்தரவு காரணமாக பொன்.ராதாகிருஷ்ணன் காரை தவிர மற்றவர்களின் காரை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

இதனால் போலீசாருக்கும், பொன். ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி ஆதரவாளர்களுடன் பஸ்சில் பம்பை சென்றார். அங்கு தரிசனம் முடிந்து நேற்று அதிகாலையில் அவர், கோவை திரும்பினார்.

அப்போது பம்பை பகுதியில் பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சென்ற காரை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதற்கும் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். கேரள அரசும், போலீசாரும் வேண்டுமென்றே ஐயப்ப பக்தர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.

சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், கேரள அரசு மற்றும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இன்று மாவட்டம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

போராட்ட அறிவிப்பு வெளியானதும் மாவட்டத்தின் மேற்கு பகுதி கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை, கருங்கல், தக்கலை போன்ற நகரங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது.

இதில், 8 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டது. பஸ்கள் மீது கல்வீசப்பட்ட தகவல் அறிந்ததும், போக்குவரத்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தினர்.

இரவு நேர ஸ்டே பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. உட்புற கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

இன்று காலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நாகர்கோவில், மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார், செட்டிக்குளம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுபோல தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், கருங்கல் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.

குமரி மாவட்டத்தில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நகர பஸ்கள் ஓடத் தொடங்கும். ஆனால் இன்று டெப்போக்களில் இருந்து எந்த பஸ்களும் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இதனால் வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வந்த பயணிகள் மற்றும் ரெயிலில் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

கேரளாவில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் அரசு பஸ்கள் கேரள எல்லையான பாறசாலையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வேலைக்கு வருவோர் தவிப்பிற்கு ஆளானார்கள்.



பஸ்கள் நிறுத்தம், கடைகள் அடைப்பு காரணமாக நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களிலும், கோட்டார், பள்ளி விளை ரெயில் நிலையங்களிலும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க வேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த மனோன்மணியம் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனை துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்தார். அதே நேரம் அரசு பள்ளி, மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பஸ்கள் ஓடாததால் வீடுகளுக்கு திரும்பினர்.

போராட்டம் காரணமாக மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம் மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஒருசில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

திருக்கார்த்திகை தினமான இன்று முழு அடைப்பு நடந்ததால் கார்த்திகை விளக்கு விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் சொக்கப்பனை கொளுத்துவது, கோவிலுக்கு செல்வது பாதிக்கப்பட்டதாக பக்தர்கள் குமுறினர்.

இன்று காலையில் தான் வடசேரி, அப்டா மார்க்கெட்டுகளில் கார்த்திகை பொருட்கள் விற்பனை களை கட்டும். பஸ்கள் ஓடாததாலும், கடைகள் மூடப்பட்டதாலும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.

முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காலை 10 மணிக்கு மேல் பஸ்கள் ஓடத் தொடங்கின. அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் ஒவ்வொன்றாக பஸ் நிலையம் வந்தது. அவை போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
Tags:    

Similar News