செய்திகள்
வானில் தோன்றிய நெருப்பு பந்து. வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் அதிசயம்- வானில் இருந்து பூமியை நோக்கி வந்த நெருப்பு பந்து

Published On 2018-11-22 11:14 GMT   |   Update On 2018-11-22 11:14 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வானில் இருந்து பூமியே நோக்கி வந்த நெருப்பு பந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய-விடிய சாரல் மழை பெய்தது.

சத்தியமங்கலத்தில் நேற்று இரவு முதல் விடிய பரவலாக பெய்த மழை இன்று காலை 9 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

சத்தியமங்கலம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது வீட்டு மாடியில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். மழையும் தூறிக் கொண்டிருந்தது.

திடீரென வானை பார்த்த அவருக்கு ஆச்சரியம் அளித்தது. வானின் உச்சியில் இருந்து தரையை நோக்கி சிறிய பந்து வடிவில் நெருப்பு பந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

உடனே அந்த நெருப்பு பந்தை தனது செல்போனில் படம் எடுத்தார். இவரைப்போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இந்த நெருப்பு பந்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அது எங்கே நமது பகுதியில் விழுந்து விடுமோ.. எனவும் பயந்தனர்.

ஆனால் அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியான திம்பம் மலை காட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் கேட்டபோது, “நெருப்பு பந்து பூமியை நோக்கி விழுந்ததாக சத்தியமங்கலம் பகுதியில் பலர் பார்த்து உள்ளனர். அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விழுந்ததாகவும் கூறினர். அப்படி வனப்பகுதியில் விழுந்திருக்கலாம். இதனால் வனப்பகுதியில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. மழை வேறு பெய்து வருகிறது. பூமியில் விழுந்து அணைந்திருக்கலாம்” என்று கூறினர்.

இந்த நெருப்பு பந்து சம்பவம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News