செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்- பொது மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கவேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-11-19 06:51 GMT   |   Update On 2018-11-19 06:51 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #Storm #Gajastorm

சென்னை:

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.

பல மாவட்டப்பகுதிகளில் நகரம் முதல் குக்கிராமம் வரை மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது.

விவசாயிகள், மீனவர்கள் போன்ற பல தரப்பட்ட மக்களும் இப்புயலினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை வர வழைத்து நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தலாம். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.

நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 அயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்திற்கேற்ப நிவாரணத்தொகையை அதிக அளவில் கொடுத்தால் தான் அவர்களால் மீன் பிடித்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியும்.

நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். புயலின் பாதிப்பை முறையாக, சரியாகக் கணக்கெடுத்து அதற்கேற்ப நிவாரணத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

இயல்பு நிலை திரும்பும் வரை சீரமைப்புப்பணிகளை துரிதப்படுத்தி, நிவாரணப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கி, இழப்பீட்டுக்கான தொகையையும் அதிகமாக கொடுத்து மக்களை துயரத்தில் இருந்து மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Storm #Gajastorm

Tags:    

Similar News