செய்திகள்

தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது

Published On 2018-11-17 02:58 GMT   |   Update On 2018-11-17 02:58 GMT
கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல்-மழைக்கு 49 பேர் பலி ஆனார்கள். #GajaCyclone #Gajastorm
சென்னை:

தமிழகத்துக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுவிட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.



கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின.

புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.

புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயல்-மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். #GajaCyclone #Gajastorm

Tags:    

Similar News