செய்திகள்

புதுவையில் கடல் சீற்றம்- விமான சேவை ரத்து

Published On 2018-11-15 11:47 GMT   |   Update On 2018-11-15 11:47 GMT
கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. #plane #gaja #CycloneGaja

புதுச்சேரி:

கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள கடந்த 5 நாட்களாக புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் ஆயத்த பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடம், அரசு பள்ளி ஆகியவை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலையொட்டி 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வந்தனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு குழு காரைக்காலுக்கு சென்றுள்ளது. மற்றொரு குழுவினர் புதுவை மீட்பு பணிகளில் ஈடு பட தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உடனடியாக நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் தனித் தனியே ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

அரசின் பொதுப்பணித் துறை, மின்துறை, உள்ளாட் சித் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புயல் தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால செயல் மையமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதி பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்களும் துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை புதுவையில் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீச தொடங்கியது. இன்று அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் புதுவையே இருண்டது. காலை 10 மணிக்கு மேல் இடியுடன் லேசான மழையும் பெய்ய தொடங்கியது.

புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

புயல் காரணமாக புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவற்றில் படகு சேவை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.

கஜா புயல் இன்று இரவு 11 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர், தேவையான மருந்து பொருட்களை இருப்பு வைத்து கொள்ளும்படியும் வருவாய்த்துறை அறிவுறுத்தி உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கவும் மின்துறை திட்டமிட்டுள்ளது. #plane #gaja #CycloneGaja 

Tags:    

Similar News