செய்திகள்

கஜா புயல் - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2018-11-14 06:33 GMT   |   Update On 2018-11-14 08:20 GMT
கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday
கடலூர்:

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.



கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால்  மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday

Tags:    

Similar News