செய்திகள்

அ.தி.மு.க. அரசு ஏழைகளுக்காக செயல்படுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

Published On 2018-11-10 12:28 GMT   |   Update On 2018-11-10 12:28 GMT
பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். #ministerrajendrabalaji #admkgovernment

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் சமுதாயம் சார்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அம்மா பேரவை வார்டு கழக செயலாளர் பிச்சை ராஜ் தலைமை வகித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

குலாளர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க. அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்படும் குலாளர் சமுதாய பள்ளி தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விலையில்லா திட்டங்களை நிறைவேற்றினார். இலவசம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, விலையில்லா அரிசி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மின்விசிறி என்று கூறினார்.

இலவசம் வேண்டாம் என்று சொன்னால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாசை நிறுத்தி வைக்க முடியுமா?

விலையில்லாமல் கொடுக்கும் சைக்கிள், லேப்டாப் திட்டத்தை நிறுத்த முடியுமா. இன்று சைக்கிள் கொடுப்பதால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நகரில் வந்து படிக்க முடிகின்றது. வசதி படைத்தவர்கள் மட்டும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் இன்றும் 1கோடியே 80 லட்சம் குடும்பம் விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்டுதான் வருகின்றனர்.

ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்து ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. ஏழைகளை இழிவு படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது செயல்படக்கூடாது. இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் இலவச திட்டங்கள் இல்லை என்று சொன்னால் எத்தனை குடும்பங்கள் பசியோடு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது.

20 கிலோ அரிசியை வாங்கி சாப்பிடும் குடும்பங்கள் இன்றளவும் இருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்படுகின்றது. 1 1/2 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டினியோடு வாழும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.

பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் முதல்வர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #ministerrajendrabalaji #admkgovernment 

Tags:    

Similar News