செய்திகள்

தேனி - பழனியில் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றிய பணம்

Published On 2018-11-02 04:55 GMT   |   Update On 2018-11-02 04:55 GMT
பழனி மற்றும் தேனியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.45 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். #Vigilance

பழனி:

பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.

இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் அங்கு வந்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஓய்வூதிய பலன்கள் வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்ததால் பணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.14 ஆயிரத்து 680-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் தீபாவளி இனாமாகவும், வேறு பெயர்களைச் சொல்லியும் வசூல் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  #Vigilance

Tags:    

Similar News