செய்திகள்
செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காட்சி.

செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Published On 2018-11-01 15:22 IST   |   Update On 2018-11-01 15:22:00 IST
செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #ChengalpattuRegistrarOffice
செங்கல்பட்டு:

மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் செங்கல்பட்டில் இயங்கி வருகிறது.

இங்கு நேற்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் போல் மாறு வேடத்தில் அலுவலகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

நேற்று மாலை 5 மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்திற்குள் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கதவை அடைத்தனர்.

அங்கு இருந்த அனைவரையும் சோதனையிட்டனர். அலுவலகத்திற்கு உள்ளே இருந்த அனைவரையும் வெளியே விடவில்லை. மேஜை டிராயர்கள், கோப்புகள் உள்ள அறைகள் அனைத்தையும் இன்று அதிகாலை 3 மணிவரையில் விடிய விடிய சோதனை செய்தனர்.

பத்திரபதிவாளர் செந்தூர் பாண்டியனின் காரை துருவி, துருவி சோதனையிட்டனர். அப்போது மேஜையிலும், கோப்புகள் அறையிலும் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

பத்திர பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களை இரவு 10 மணி வரைக்கும் பத்திர பதிவு செய்ய அனுமதித்தனர். ஆன்லைனில் பத்திர பதிவுக்கு விண்ணப்பித்த இவர்களை வரிசை எண் பிரகாரம் பதிவாளர் செந்தூர் பாண்டியன் பதிவு செய்தார். பத்திர பதிவின் போது சொத்தை வாங்குபவர்களும் மற்றும் சாட்சியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை கண்ட புரோக்கர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். எப்போதும் புரோக்கர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் பத்திர பதிவு அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததால் புரோக்கர்கள் யாரும் இல்லை.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. #ChengalpattuRegistrarOffice
Tags:    

Similar News